தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பன்னீர்செல்வி தலைமையில் திருநங்கைகள் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘தென்காசி மாவட்டத்தில் சுமார் 150 திருநங்கைகள் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் படித்திருந்தும் வேலை இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறோம். எங்களால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.