‘தினமும் யோகா செய்தால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும்’-கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேச்சு

தினமும் யோகா செய்தால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

Update: 2021-06-21 19:33 GMT
சிவகங்கை,

தினமும் யோகா செய்தால் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறினார்.

சர்வதேச யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தையொட்டி சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்துகொண்டு யோகாசனம் செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
யோகாவை பொறுத்தவரை 8 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சியாகும். காலையில் எழுந்தவுடன் சுமார் 20 நிமிடம் வரை தரையில் அமர்ந்து யோகாசனம் மேற்கொண்டால் உடல்நிலை ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் மருத்துவமனைக்கு செல்லும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும். மனமும் ஆரோக்கிய நிைலயை அடையும்.

மன அழுத்தம் குறையும்

 இதில் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலைப்பளு இருக்கும் நிலையில் அவர்கள் இதில் ஈடுபட்டால் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் நன்றாக இருக்கும். எனவே வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தினந்தோறும் அதிகாலையில் 20 நிமிடங்கள் யோகாவிற்கு நேரம் ஒதுக்கி இதில் ஈடுபட வேண்டும்.
தினந்தோறும் யோகா பயிற்சியில் ஈடுபடும் போது உடல் வலிமை ஏற்பட்டு எவ்வித நோயும் இல்லாமல் பாதுகாக்கலாம்.
இதேபோல் அரசு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களும் தினந்தோறும் யோகா பயிற்சியில் ஈடுபட்டால் அவர்களின் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் யோகா மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அலுவலர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருப்பதிராஜன், பழனியம்மாள், உமாமகேஸ்வரி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் தனராணி, ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜா, யோகா பயிற்சி ஆசிரியர் பரமசிவம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்