கோவையில் சூடுபிடிக்கும் நாவல் பழ விற்பனை
கோவையில் சூடுபிடிக்கும் நாவல் பழ விற்பனை
கோவை
கோடைகாலத்தில் மாம்பழம் மற்றும் பலாப்பழத்துடன் நாவல் பழமும் விற்பனைக்கு வரும். நாவல் பழங்கள் 3 மாதங்களுக்கு மட்டும் கிடைக்கும். கல்லீரல் கோளாறுகள், குடல் புண் ஆகியவற்றுக்கு நாவல் பழம் சிறந்த மருந்தாக உள்ளது.
சிறப்பு மிக்க இந்த நாவல் பழம் சீசன் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இருக்கும்.
கோவையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது டவுன்ஹால், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, பேரூர் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு உள்பட பல பகுதிகளில் வியாபாரிகள் நாவல் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். அதன் விற்பனை சூடுபிடித்து உள்ளது.
இதுகுறித்து நாவல் பழ வியாபாரி கூறியதாவது:-
ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பெரிய அளவு கொண்ட ஹைபிரிட் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அந்தப் பழங்கள் தான் தற்போது கோவையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பழங்கள் கடந்த வாரம் முழுவதும் ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை அவ்வப்போது பெய்து வருவதால் விலை குறைந்து கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.