திருப்பூரில் இருசக்கர வாகனத்தை விற்பதாக கூறி ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூரில் இருசக்கர வாகனத்தை விற்பதாக கூறி ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-21 18:45 GMT
திருப்பூர்,
திருப்பூரில் இருசக்கர வாகனத்தை விற்பதாக கூறி ஆன்லைன் வர்த்தக மோசடியில் ஈடுபட்ட பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
 இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆன்லைன் தளம்
திருப்பூர் கூத்தம்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 30). இவர் ஆன்லைன் தளத்திற்கு சென்று இருசக்கர வாகனம் வாங்க தேடியுள்ளார். அந்த வலைதளத்தில் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் இருசக்கர வாகனம் விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதிலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தியாகராஜன் பேசியுள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர் தனது பெயர் பிரகாஷ் என்றும், கோவையில் வசிப்பதாகவும் கூறி இருசக்கர வாகனம் ஒன்றை ரூ.18 ஆயிரத்திற்கு விலை பேசி உள்ளனர். இதையடுத்துபிரகாஷ் தெரிவித்த வங்கி கணக்குக்கு தியாகராஜன் ரூ.18 ஆயிரத்தை அனுப்பினார்.
தனிப்படை
அதன் பின்னர் பிரகாஷ் கூறிய இடத்திற்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய செல்போனும் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டு இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை தொடர்ந்து கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில், சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ணவல்லி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், காவலர்கள் தங்கபாண்டி, ஹரிஹரசுதன், விஷ்வா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
பட்டதாரி கைது
தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சரவணகுமார் (35) என்பவரை பிடித்தனர். இவர் பட்டதாரி ஆவார். அவரிடமிருந்து 47 சிம் கார்டுகள் பறிமுதல் செய்தனர். 17 வங்கி கணக்குகளை பிரகாஷ் என்ற பொய்யான பெயரில் தொடங்கி பலரை ஏமாற்றி ஆன்லைன் மூலமாக பணத்தை ஏமாற்றியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார். பொதுமக்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது தீர விசாரித்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றும், இது போல் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்