மகளிடம் அத்துமீறிய நாடக நடிகர் தலையில் அம்மிக்குழவியை போட்டு கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே குடிபோதையில் மகளிடம் அத்து மீறிய, நாடக நடிகர், தலையில் அம்மிக்குழவியை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டார்.;

Update: 2021-06-21 18:14 GMT
கீழ்பென்னாத்தூர்

நாடக நடிகர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள நெடுங்காம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 40 வயது நாடக நடிகர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19, 17 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். மனைவி வீட்டிலேயே துணிகள் தைத்து வருகிறார். நேற்று காலையில் நாடக நடிகரின் மனைவி தையலுக்கு தேவையான நூல் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக தனது 2-வது மகளுடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.

மூத்த மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வெளியில் சென்றிருந்த நாடக நடிகர் நண்பகல் 12 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் போதையில் வீட்டில் இருப்பது தனது மகள் என்றும் பார்க்காமல் அத்துமீறி உள்ளார். 
அம்மிக்குழவியை போட்டுகொலை

இதனால் ஆத்திரமடைந்த மகள், தந்தையை பிடித்து தள்ளி உள்ளார். இதில் அவர் கீழே விழுந்துள்ளார். அத்துடன் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த அம்மி குழவியை தூக்கி தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் ஷியாமளா, சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கொலைசெய்யப்பட்ட நாடக நடிகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்