கடலூர், விருத்தாசலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூர், விருத்தாசலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதை உடனே திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடலூர் சி.ஐ.டி.யு. அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத்தலைவர் பால்கி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் ஆளவந்தார், ஸ்டாலின், கருணாகரன், கோதண்டம், அரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூலி வழங்கும் முறையில் சாதி ரீதியான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினக்கூலியாக ரூ.600 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விருத்தாசலம்
இதேபோல் விருத்தாசலத்தில் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சிவஞானம், கலைச்செல்வன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக உயர்த்திட வேண்டும், எஸ்.சி. எஸ்.டி. ஊழியர்களை பகுப்பாய்வு செய்வதை கைவிட வேண்டும், மேலும் இந்த திட்டத்தில் சாதி ரீதியான கணக்கெடுப்பு நடத்த கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் விருத்தாசலம் சப்-கலெக்டர் (பொறுப்பு) ஞானவேலை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் ஞானவேல் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.