தேனி அருகே பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றவில்லை என மகள் திட்டியதால் பெண் தற்கொலை தாய் இறந்த அதிர்ச்சியில் மகளும் உயிரை மாய்த்த பரிதாபம்

தேனி அருகே பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்று மகள் திட்டியதால் அரளிவிதையை தின்று தாய் தற்கொலை செய்தார். தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-21 15:59 GMT
தேனி :
தேனி அருகே பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றவில்லை என்று மகள் திட்டியதால் அரளிவிதையை தின்று தாய் தற்கொலை செய்தார். தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அடுத்தடுத்து உயிரிழப்புகள்
தேனி அருகே உள்ள பள்ளப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் லோகநாதன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராக்கம்மாள் (வயது 55). இவர்களுக்கு உதயராஜா என்ற மகனும், லோகமணி (32) என்ற மகளும் இருந்தனர். உதயராஜா கடந்த 12 ஆண்டுக்கு முன்பு பாம்பு கடித்து உயிரிழந்தார்.
லோகமணிக்கும், கம்பத்தை சேர்ந்த புகழேந்தி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு புகழேந்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பின்னர், லோகமணி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு லோகநாதன் தனது வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறி பரண் அமைக்க முயன்றார். அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், ராக்கம்மாளுடன் மகள் லோகமணி வசித்து வந்தார்.
தாய்-மகள் தற்கொலை
இவர்கள் வீட்டில் பூச்செடிகள் வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் லோகமணி தனது தாயிடம், பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றுமாறு கூறினார். ஆனால் அவர் தண்ணீர் ஊற்ற மறந்து விட்டார். இதனால் அவர் தனது தாயை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராக்கம்மாள் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் வாந்தி எடுத்ததை பார்த்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாய் இறந்த தகவல் அறிந்ததும் லோகமணி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் நள்ளிரவில் வீட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் மருத்துவமனையில் ராக்கம்மாள் இறந்த தகவலை அறிந்து அவருடைய வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அங்கு வீட்டுக்குள் லோகமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எமனின் பிடியில் சிக்கிய குடும்பம்
இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எமனின் பிடியில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
----

மேலும் செய்திகள்