மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரரை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர், ஜூன்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சலுப்பைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவர் தனிப்படை குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அங்குள்ள அணைக்கரைப்பட்டி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வந்த தகவலின் பேரில் போலீஸ்காரர் ராஜா அது குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதிக்கு காரில் சென்றார்.
அப்போது அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சேகர், கட்டகருப்பு, தங்கப்பாண்டி, பெருமாள், ஜான்கென்னடி, தங்கப்பாண்டி, ஜோசப்ராஜன், ராஜகுரு, கந்தவேல், பென்னி என்ற பார்த்திபன் ஆகியோர் டிராக்டர் மற்றும் லாரியுடன் போலீஸ்காரர் ராஜாவின் காரை சுற்றி வளைத்தனர்.
பின்னர் போலீஸ்காரர் ராஜாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. மேலும் விறகு கட்டையால் ராஜாவை அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ராஜா ஓட்டி வந்த காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது குறித்து போலீஸ்காரர் ராஜா சாப்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த டிராக்டர், லாரி மற்றும் 2 மோட்டார்ைசக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அணைக்கரைப்பட்டியை சேர்ந்த பெருமாள் (35) தங்கப்பாண்டி (21), ஜான் கென்னடி (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.