போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

கடலூர் மாவட்ட பகுதியில் பணம் வசூலித்ததாக புகாரை தொடர்ந்து குன்னம் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 21:04 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட எல்லையான கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமம் அருகே போலீஸ் ஏட்டு ஒருவர் வாகனங்களை மறித்து பணம் வசூலிப்பதாகவும், கடைகளில் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் மிரட்டுவதாகவும் திட்டக்குடி போலீசாருக்கு நேற்று முன்தினம் மதியம் புகார் வந்தது.
இதையடுத்து திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் நேரில் சென்று அவரிடம் விசாரித்தனர். மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு திட்டக்குடி போலீசார் அழைத்ததும், அந்த போலீஸ் ஏட்டு என்னை நீங்கள் விசாரிக்க முடியாது, என்னுடைய வண்டியையும் தொடக்கூடாது என திட்டக்குடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அந்த போலீஸ் ஏட்டு, தன்னை விட்டுவிடுமாறு போலீசாரிடம் கெஞ்சி உள்ளார். இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் ரவிச்சந்திரன் என்பதும், இவர் பலமுறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஏட்டு ரவிச்சந்திரன், திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து ரவிச்சந்திரனை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து ஏட்டு ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்