கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்
சிக்கோடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு: சிக்கோடியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
கள்ளநோட்டுகள்
பெலகாவி மாவட்டம் சிக்கோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு, ரூ.82 ஆயிரம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு இருந்தது. இதுகுறித்து சிக்கோடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு ஆகி இருந்தது.
மேலும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதானவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்ததால், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.
இதையடுத்து கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டது குறித்து தேசிய புலனாய்வு முகமையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
வங்காளதேசத்தில் இருந்து...
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் சரிபுல் இஸ்லாம் என்பவரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து மால்டா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரிபுல் இஸ்லாமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த சதாம் சேக், அக்கீம் சேக்கிடம் இருந்து கள்ளநோட்டுகளை வாங்கி அதை சிக்கோடியில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சதாம் சேக், அக்கீம் சேக்கை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே கைதான 5 பேருக்கு பெங்களூருவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தலா 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.