குமரியில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

குமரியில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-20 20:19 GMT
நாகர்கோவில்:
குமரியில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருந்து தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வரும் தடுப்பூசிகள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது வரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 94 பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதே போல 2-ம் கட்ட தடுப்பூசியை 49 ஆயிரத்து 267 பேர் போட்டுள்ளனர். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் 12,500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தது. அந்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக நாகர்கோவில் உள்பட மொத்தம் 40 இடங்களில் நேற்று சிறப்பு முகாம்கள் நடந்தன. அதாவது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு 25 இடங்களிலும், 45 வயதை தாண்டியவர்களுக்கு 15 இடங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது.
நீண்ட வரிசை
நாகர்கோவிலை பொறுத்த வரையில் இந்து கல்லூரி, டதி பள்ளி, கவிமணி பள்ளி, ஸ்காட் கல்லூரி, கேந்திர வித்யாலா பள்ளி ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு டோக்கன் வினியோகம் செலுத்தப்பட்டது.
ஆனால் டோக்கன் வாங்குவதற்காக ஏராளமானோர் காலை 6 மணிக்கே முகாமுக்கு வந்து காத்திருந்தனர். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அளவுக்கு அதிகமான கூட்டம் காணப்பட்டது. அதில் சிலர் டோக்கன் வாங்குவதற்காக காலை உணவையும் கையோடு கொண்டு வந்திருந்தனர். டோக்கன் வாங்கியதும் முகாமுக்குள் ஒரு பகுதியில் அமர்ந்து உணவை சாப்பிட்டனர். ெதாடா்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 
ஒரு கிலோ மீட்டர்
கோட்டார் கவிமணி பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக வந்தவர்கள் வரிசை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை இருந்தது. இதே போல இந்து கல்லூரி, ஸ்காட் கல்லூரி, டதி பள்ளி, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. 
ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி போடுவதற்கு முன்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேலு மயில் பார்வையிட்டார்.
17,500 டோஸ் வந்தது
இந்த நிலையில் குமரி மாவட்டத்திற்கு நேற்று 17 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன. அவை இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. 

மேலும் செய்திகள்