வீட்டில் பதுக்கி வைத்த ரூ.56½ லட்சம் கஞ்சா பறிமுதல்

குமரி, கேரள எல்லையில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.56½ லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-06-20 20:13 GMT
அருமனை:
குமரி, கேரள எல்லையில் வீட்டில் பதுக்கி வைத்த ரூ.56½ லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கஞ்சா 
குமரி மாவட்ட எல்லையான அருமனை போலீஸ் சரகம் அண்டுகோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.
அப்போது அந்த வீட்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேயோடு பகுதியை சேர்ந்த முகமது அனாஸ் (வயது 45) என்பவர் வாடகைக்கு வசித்து வந்ததும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
ரூ.56½ லட்சம் மதிப்பு
அந்த வீட்டில் 100 பைகளில் 200 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.56½ லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
முகமது அனாஸ் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த போது, மனைவியுடன் வந்து தங்கியதாகவும், பின்னர் அவருடைய மனைவி கேரளாவுக்கு ெசன்று விட்டதாகவும் தெரியவந்தது.
2 பேருக்கு வலைவீச்சு
அதன்பிறகு முகமது அனாஸ் அடிக்கடி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விடுவார். இதனால் வீட்டை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் கூறினார். அதை தொடர்ந்து முகமது அனாஸ் வீட்டை காலி செய்ய தயாராக இருந்தார். அந்த சமயத்தில், அவர் பதுக்கி வைத்த கஞ்சாவை வேறு இடத்துக்கு மாற்ற முயன்ற நிலையில் கஞ்சா சிக்கியது.
குமரி மாவட்டம் முழுவதும் முகமது அனாஸ் கஞ்சா சப்ளை செய்ததும் தெரிய வந்தது. ஆனால், போலீசார் வருவதை அறிந்த முகமது அனாஸ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் கஞ்சா கடத்தலில் முகமது அனாசுக்கு உதவியாக ஷாலினி என்ற பெண் இருந்துள்ளார். அவரும் தலைமறைவாகி விட்டார். 
முகமது அனாஸ், ஷாலினி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்