48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் சேலத்தில் ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றும், 46 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது என்றும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.

Update: 2021-06-20 20:09 GMT
சேலம்:
சேலம் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 8 ஆயிரத்து 53 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றும், 46 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது என்றும் ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.
ஆய்வு
சேலம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதியில் நேற்று 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. ஒரே நாளில் 8 ஆயிரத்து 53 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்கள்
மேலும் 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 3 ஆயிரத்து 428 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறிகள் உள்ள 2 ஆயிரத்து 857 பேருக்கு சளி  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,117 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தற்காலிக சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் 12 பகுதிகளும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 22 பகுதிகளும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் 3 பகுதிகளும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 14 பகுதிகளும் என மொத்தம் 51 பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொங்கும் பூங்கா தற்காலிக சிகிச்சை மையத்தில் 107, காந்தி மைதானத்தில் 41 அரசு பெண்கள் கல்லூரி சித்தா மையத்தில் 61 சோனா கல்லூரி தற்காலிக சிகிச்சை மையத்தில் 46 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 12 ஆயிரத்து 183 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 32 ஆயிரத்து 663 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி பொறியாளர் சுரேஷ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்