குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டம்

நெல்லையில் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-20 19:46 GMT
நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவில் மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு ஒரு குடிநீர் தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் கட்டி முடித்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை பைப்லைன் மூலமாக தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அந்தப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் தொட்டி முன்பு திரண்டனர். அவர்கள் முககவசம் அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓராண்டாகியும் திறப்புவிழா காணாமல் இருக்கும் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்