ஒட்டன்சத்திரம் அருகே மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
ஒட்டன்சத்திரம் அருகே மண் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியன்வலசு பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள மண்ணை சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் அள்ளிக்கொண்டிருந்தனர். மேலும் மண் அள்ளும்போது, வெள்ளியன்வலசு கிராமத்திற்கு செல்லும் குடிநீர் குழாயும் உடைந்து போனது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி தலைமையில் அங்கு திரண்டனர். அப்போது மண் அள்ளிய லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்தனர். மேலும் மண் அள்ளிய டிரைவர்களுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கனிமவளத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, பொக்லைன் எந்திரம் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.