நெல்லையில் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது
ஊரடங்கில் தளர்வு எதிரொலியாக நெல்லையில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
ஊரடங்கில் தளர்வு எதிரொலியாக நெல்லையில் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் மூடப்பட்டன. மளிகை மற்றும் காய்கறி பொருட்கள் தெருத்தெருவாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா குறைந்துள்ள மாவட்டங்களில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அனைத்து மளிகை, காய்கறி கடைகள், பழக்கடைகள், இறைச்சி, பூக்கடைகள் திறக்கப்பட்டன.
கூட்டம் அலைமோதியது
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் மீன், இறைச்சி வாங்க கடைகளில் அதிக அளவில் வந்தனர். இதனால் மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதியது. விலையும் சற்று அதிகமாக இருந்தது.
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பாளையங்கோட்டை குலவணிகர்புரத்திலுள்ள மீன் கடையில் அதிகாலையிலேயே மக்கள் திரளாக வந்து மீன் வாங்கிச்சென்றனர். இதேபோல் நெல்லை டவுன், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதுதவிர இறைச்சி, மீன் வியாபாரிகள் பலர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கி சென்றனர்.