காதலியை தேடிச்சென்ற கல்லூரி மாணவரின் கதி என்ன?

ஸ்ரீமுஷ்ணம் அருகே காதலியை தேடிச்சென்ற கல்லூரி மாணவரின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-20 19:10 GMT
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள ஸ்ரீநெடுஞ்சேரி காலனித்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன்(வயது 22). இவர்  தொலைத்தூர கல்வி மூலம் கணிதம் 2-ம் ஆண்டு  படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர் இரவு நீண்டநேரமாகியும் திரும்பி வரவில்லை. 
இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேவராஜனை தேடி அலைந்தனர். அப்போது அவர் தனது காதலியை பார்த்து வருவதற்காக அருகில் உள்ள சாவடிக்குப்பம் கிராமத்துக்கு சென்று இருப்பதாக நண்பர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தேவராஜனின் உறவினர்கள் சாவடிக்குப்பம் கிராமத்துக்கு சென்றனர்.

வேட்டி-செல்போன்

சாவடிக்குப்பம் - விநாயகபுரம் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் தேவராஜனின் மோட்டார் சைக்கிள் பூட்டிய நிலையில் கேட்பாரற்று நின்றது. அங்குள்ள கிணற்றின் அருகில் உள்ள மரத்தடியில் அவரது வேட்டி, செல்போன், மூக்கு கண்ணாடி, செருப்பு மற்றும் மோட்டார் சைக்கிளின் சாவி கிடந்தது. ஆனால் தேவராஜனை காணவில்லை. 
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜனின் அண்ணன் தீயரசன் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், காதலியை பாக்க சென்ற தனது தம்பி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். 

வதந்தி பரவியது

இதற்கிடையில் தேவராஜனை கொலை செய்து அருகில் உள்ள கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற வதந்தி கிளம்பியது. இதையடுத்து ஸ்ரீநெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாவடிக்குப்பம் கிராமத்தில் தேவராஜனின் உடமைகள் கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் அருகே திரண்டனர். 
இது பற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, 30 அடி ஆழமுள்ள கிணற்றில் கிடந்த தண்ணீரை 2 மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர். ஆனால் கிணற்றில் அவரை காணவில்லை. இதன் பின்னரே தேவராஜனின் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

காதலியிடம் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக தேவராஜனின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தேவராஜன் தன்னை சந்திக்க வருவதாக செல்போனில் கூறினார். அதன்படி நான் அவருக்காக ஓரிடத்தில் காத்திருந்தேன். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வராததால், நான் வீட்டுக்கு சென்று விட்டேன் என்று கூறினார்.  
காதலியை தேடி வந்த தேவராஜன் கதி என்ன ஆனது? என்பது மர்மமாகவே உள்ளது. எனவே இந்த மர்ம முடிச்சை அவிழ்க்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்