தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்
தொழில் தொடங்க ஆலோசனை தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்
கோவை
தொழில்தொடங்க ஆலோசனை தருவதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனியார் நிதி நிறுவன அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கருத்து வேறுபாடு
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த 48 வயது பெண் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது
எனக்கு கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டு 2-வதாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண் டேன். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை விட்டு பிரிந்து சிங்காநல்லூர் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
தொழில் தொடங்க முடிவு
இந்த நிலையில் ஏதாவது ஒரு தொழில் தொடங்கலாம் என்று கடந்த ஆண்டு முடிவு செய்தேன். இது குறித்து இணையதளத்தில் எனது முகவரி மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டேன்.
அதைபார்த்து சென்னை முகப்பேரை சேர்ந்த ஆனந்த்சர்மா என்பவர் என்னை தொடர்பு கொண்டார். அவர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதாகவும், நாம் இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என்று என்னிடம் கூறினார்.
இது தொடர்பாக அவர் என்னை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதன்காரணமாக எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது. அவரிடம் எனது குடும்ப சூழ்நிலை மற்றும் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவது பற்றி கூறினேன்.
ஓட்டலுக்கு அழைத்தார்
மேலும் சுயமாக தொழில்தொடங்க உள்ளதாக அவரிடம் கூறினேன். உடனே அவர், தொழில் தொடங்க உதவுவதாக கூறினார்.
இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் என்னை தொடர்பு கொண்டு கோவைக்கு வந்து உள்ளதாகவும், ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர், தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை தருவதாகவும், தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வருமாறும் அழைத்தார். அதை நம்பி நான் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றேன்.
பாலியல் பலாத்காரம்
அப்போது அவர், தனக்கு திருமணமாகி விட்டது என்றும், மனைவி பிரிந்து சென்று விட்டதாகவும், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசைவார்த்தை கூறினார். பின்னர் அவர், என்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த நிலையில் அவர் மனைவி, குழந்தைகளுடன் இருப்பதும், அவருக்கு விவாகரத்து ஆகவில்லை என்பதும் தெரியவந்தது.
எனவே நான் ஏமாற்றப்பட்டது குறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் உரிய பதில் அளிக்காமல் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அந்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆனந்த்சர்மா மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.