போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக வீடுபுகுந்து தொழிலாளியை தாக்கிய சாராய கும்பல்

வேலூர் அருகே சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக கூறி தொழிலாளியின் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-06-20 18:18 GMT
வேலூர்

சாராய கும்பல்

வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள குருமலை, நச்சிமேடு போன்ற மலைக்கிராமங்களை சேர்ந்த சிலர் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ரகசிய தகவலின் பேரில் சாராய கும்பலின் மறைவிடங்களை போலீசார் கண்டறிந்து சாராய காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், ஊறல் போன்றவற்றை கைப்பற்றி உள்ளனர்.

ஜன்னல் கண்ணாடி உடைப்பு

மலைஅடிவாரப்பகுதியில் அமைந்துள்ள சிவநாதபுரத்தை சேர்ந்த தொழிலாளியான சசிகுமார் (வயது 39) தான், போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுப்பதாக சாராய கும்பலை சேர்ந்தவர்கள் கருதி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகுமார் வீட்டில் இருந்தபோது, சாராய கும்பலை சேர்ந்த 3 பேர் சசிகுமாரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். சசிகுமாரிடம் அவர்கள், போலீசாருக்கு நீ தான் எங்களை பற்றி தகவல் கொடுக்கிறாய்... உன்னை விடமாட்டோம். என்று கூறி அவரை சரமாரியாக தாக்கினர்.

 இதைப்பார்த்த சசிகுமாரின் மனைவி அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரையும் ஆபாசமாக பேசி, துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். மேலும், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

பரபரப்பு

இதையடுத்து சசிகுமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 முதல்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் குருமலையை சேர்ந்த ராம்குமார், ராஜா, குமார் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்