பெண்ணிடம் 5¼ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
லாலாபேட்டை அருகே தண்ணீர் பிடிக்க வந்த பெண்ணிடம் 5¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
லாலாபேட்டை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி, பூவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சாந்தி (வயது 45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 18-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள ெபாதுக்குழாயில் குடிநீர் பிடிப்பதற்காக குடத்துடன் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் சாந்தியுடன் பேச்சு கொடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சாந்தி கண்இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5¼ பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 3 பேரும் தங்கசங்கிலியுடன் தப்பி சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் மர்மநபர்களை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாந்தி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.