குளித்தலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

குளித்தலையில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-20 18:10 GMT
குளித்தலை
வேகத்தடை
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப்பகுதி வழியாக திருச்சி, கரூர், முசிறி, மணப்பாறை உள்பட பல்வேறு ஊர்கள் மார்க்கமாக அரசு, தனியார் பஸ், லாரி, வேன், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. நகரப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கும் பொருட்டும், குளித்தலை நகரப்பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளிகள், பஸ்நிலையம், சுங்ககேட் ஆகிய இடங்களில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
வாகனங்கள் மோதி விபத்து
இந்தநிலையில் குளித்தலை பஸ்நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையை கடந்த 3 வருடத்திற்கு முன்பு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பிறகு இங்கு வேகத்தடை அமைக்கப்படவே இல்லை. இதனால் குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள வளைவான சாலையில் திரும்பும் வாகனங்கள் வேகமாக வருவதால், எதிரே வரும் வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகும் ஆபத்தான நிலை உள்ளது.
 இங்கு வேகத்தடை அமைக்க கோரி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டும் நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 
பொதுமக்கள் கோரிக்கை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளித்தலை பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்ட போதும் ஏற்கனவே பஸ் நிலையம் அருகே இருந்த இடத்தில் வேகத்தடை அமைக்க கோரி கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் வேகத்தடை அமைக்கப்படவில்லை.
 இந்தநிலையில் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு குளித்தலை பஸ் நிலையம் அருகே உள்ள வளைவான சாலைப் பகுதியில் ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்