தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து டிரைவர் உடல் நசுங்கி பலி
தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.
நல்லம்பள்ளி:
லாரி கவிழ்ந்தது
கர்நாடகாவில் இருந்து தவிடு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, மதுரைக்கு செல்வதற்காக தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொட்டவூரை சேர்ந்த டிரைவர் பிரபுதேவா (வயது 30) ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது சாலையோர இரும்பு தடுப்பு மீது மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பிரபுதேவா இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த டிரைவர் பிரபுதேவாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைஅனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சுங்கச்சாவடி ரோந்து படையினர் மற்றும் போலீசார் கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.