பாகலூர் அருகே மனைவி அடித்துக்கொலை: டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்தனர்
பாகலூர் அருகே மனைவியை அடித்துக்கொன்ற டிரைவரை பிடிக்க தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் மாலூருக்கு விரைந்துள்ளனர்.
ஓசூர்:
கர்நாடக தம்பதி
கர்நாடக மாநிலம் மாலூர் அருகே உள்ள ஒக்கலேரியை சேர்ந்தவர் ராதம்மா (வயது 32). இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்தவர். இவருக்கும், கர்நாடக மாநிலம் மாஸ்தி அருகே உள்ள மலகலப்பள்ளியை சேர்ந்த டிரைவரான வெங்கடேஷ் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள கக்கனூர் சோதனைச்சாவடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர். கடந்த 17-ந் தேதி, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டின் உரிமையாளர் மஞ்சுநாத் மற்றும் சிலர் அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.
பெண் அடித்துக்கொலை
இந்தநிலையில் 2 நாட்களாக அவர்களது வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மஞ்சுநாத் பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராதம்மா கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தபோது, வெங்கடேஷ் தனது ராதம்மாவை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்ததும், பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியதும் தெரியவந்தது.
கர்நாடக மாநிலத்தில் பதுங்கல்
மனைவியை அடித்துக்கொலை செய்த டிரைவர் வெங்கடேசை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடேஷ் கர்நாடக மாநிலம் மாலூரில் பதுங்கி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் வெங்கடேசை கைது செய்ய மாலூருக்கு விரைந்துள்ளனர்.