பந்தலூர் அருகே பள்ளி மாணவி உடல் கருகி சாவு
பந்தலூர் அருகே சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்தது பள்ளி மாணவி உடல் கருகி இறந்தார்.
பந்தலூர்
பந்தலூர் அருகே உள்ள மழவன்சேரம்பாடியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி லலிதாகுமாரி. இவர்களுக்கு நிஷாந்தி (வயது 13) என்ற மகள் இருந்தாள். நிஷாந்தி பந்தலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜா பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் லலிதாகுமாரி தனது மகளுடன் வசித்து வந்தார்.
கடந்த 12-ந் தேதி நிஷாந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென அவளது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் அவளை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.