சாலை மறியலுக்கு முயன்ற பெண்கள்

பழனியில் அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-20 15:29 GMT
பழனி: 

பழனி தெரசம்மாள் காலனியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3, 4 மற்றும் 13-வது வார்டு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் பயின்று வந்தனர். 

இந்தநிலையில் நேற்று காலை 4-வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதிக்கு ஒரு அங்கன்வாடி மையத்தை அமைத்து தர வலியுறுத்தி, பழைய தாராபுரம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலுக்கு முயன்ற பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அந்த பகுதி பெண்கள் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடி பணியாளர்கள் வீடுதோறும் சென்று குழந்தைகளுக்கு சத்துமாவு மற்றும் முட்டைகளை வழங்கி வருகின்றனர்.

 ஆனால் அங்கன்வாடி பணியாளர்கள் பொருட்களை கடத்தி செல்வதாக கூறி சிலர் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு சத்துணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. 


எனவே கூட்டாக செயல்படும் அங்கன்வாடி மையத்தை பிரித்து எங்கள் பகுதிக்கு என தனியாக அங்கன்வாடி மையம் அமைத்துத்தர வேண்டும் என்றனர். 

அப்போது போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து மறியலுக்கு முயன்ற பெண்கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்