ஆத்தூர் அருகே விபத்தில் இளம்பெண் படுகாயம்

ஆத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் படுகாயம் அடைந்தார்

Update: 2021-06-20 13:42 GMT
ஆறுமுகநேரி:
திைசயன்விளை ஹைவே ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 36). இவருக்கு ஆத்தூர் அருகே உள்ள உமரிகாட்டில் திருமணம் ஆகி உள்ளது.இவரது மாமனார் சிவசுப்பிரமணிய நாடார் கடந்த சில நாட்களாக உடல் நலம்குன்றி ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மாமனாரை சிவகுமார் பார்த்து ஆறுதல் கூறிவிட்டு அவருக்கு சாப்பாடு வாங்குவதற்காக உமரிக்காடு சென்றார். அங்கு தனது மனைவியின் தங்கை சுபஸ்ரீயை துணைக்கு அழைத்துக் கொண்டு சாப்பாட்டுடன் ஆத்தூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மாமனாருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் உமரிக்காடு செல்லும் வழியில் முக்காணி உள்ள பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு உமரிக்காடு செல்ல திரும்பியபோது, இவர்களுக்கு பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் நிறுத்தாமல், வேகமாக செலுத்தி தப்பி சென்று விட்டார். இதில் பின்னால் அமர்ந்திருந்த சுபஸ்ரீ தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
இது தொடர்பாக சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் வழக்குப்பதிவு செய்து வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை கண்காணிப்பு கேமரா மூலம் தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்