168 கோவில்களை சேர்ந்த 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் - மளிகை பொருட்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில், 168 கோவில்களை சேர்ந்த 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் நிவாரண உதவியை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா நோய் பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஊதியமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் ஆகியோர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டதினை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 168 கோவில்களை சேர்ந்த அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் என 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் நிதியுதவியும், மேலும் 10 கிலோ அரிசி, 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கப்படுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் பாலாஜி மற்றும் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா நன்றி கூறினார்.