கொரோனா பாதிப்பு குறைந்ததால் பெங்களூரு- நாகர்கோவில் சிறப்பு ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்

கொரோனா பாதிப்பு குறைந்ததால் சேலம் வழியாக பெங்களூரு- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

Update: 2021-06-19 23:03 GMT
சேலம்:
கொரோனா பாதிப்பு குறைந்ததால் சேலம் வழியாக பெங்களூரு- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
நோய் தொற்று குறைவு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர பரவலாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது.  
தமிழகத்தில் நோய் தொற்று வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பல்வேறு நகரங்களுக்கு 10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது ரெயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
சிறப்பு ரெயில் இயக்கம்
இதனிடையே, பெங்களூரு- நாகர்கோவில் (வண்டி எண்-07235) சிறப்பு ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இந்த ரெயில் பயணிகள் வரத்து குறைவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவில் வசித்து வரும் தென் மாவட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில், ஓசூர், சேலம், நாமக்கல், கரூர் வழியாக தினமும் செல்லும் பெங்களூரு -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07235) நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல் மறு மார்க்கமாக நாகர்கோவில்- பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண் - 07236) நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. 
முன்பதிவு
இந்த 2 ரெயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில்-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்