சேலம் மாவட்டத்தில் இன்று 127 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- கலெக்டர் கார்மேகம் தகவல்
சேலம் மாவட்டத்தில் இன்று 127 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.;
சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று 127 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 82 ஆயிரத்தை தாண்டியது. கொரோனாவுக்கு 1,250-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 17-ந் தேதி மாவட்டத்தில் 122 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. அன்றைய தினம் மட்டும் 30 ஆயிரத்து 443 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டன.
இதையடுத்து டோஸ்கள் இருப்பு இல்லாததால் நேற்று முன்தினம் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. இதனால் தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
127 மையங்கள்
இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு வாகனம் மூலம் 22 ஆயிரத்து 500 கோவிஷீல்டு டோஸ்கள் கொண்டு வரப்பட்டன. இதில் சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 17 ஆயிரமும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 5 ஆயிரத்து 500 அடங்கும். இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டத்தில் இன்று 127 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அப்போது அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ரெட்டியூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு கலைக்கல்லூரி, 39-வது வார்டு அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை, சீலநாயக்கன்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆகிய 4 மையங்களில் மட்டுமே கோவேக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. மீதியுள்ள 123 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு செலுத்தப்படும். இந்த வாய்ப்பை மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.