ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிதி-மளிகைப்பொருட்கள்; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப்பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட கோவில்களில் பணியாற்றும் 743 அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப்பொருட்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
நிவாரண உதவித்தொகை
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நிலையான மாத சம்பளம் இல்லாமல் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி மாவட்டம் தோறும் உதவித்தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா உதவித்தொகை, மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திண்டல் வேலாயுதசாமி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
அமைச்சர் வழங்கினார்
நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு ரூ.4 ஆயிரம், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப்பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையாளர் அன்னக்கொடி, உதவி ஆணையாளர் சபர்மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தட்டுக்காணிக்கை மட்டுமே பெற்று பணி செய்து வரும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகள் மொத்தம் 139 பேரும், கோவில்களில் முடிகாணிக்கை செலுத்துபவர்களுக்கு மொட்டையடிக்கும் பணியாளர்கள், ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகள் 604 பேரும் என மொத்தம் 743 பேருக்கு இந்த உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது.