எடியூரப்பாவை ஆந்திர கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசிப்பதாக தகவல்

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்து வரும் எடியூரப்பாவை ஆந்திர கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2021-06-19 20:31 GMT
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரியாக இருந்து வரும் எடியூரப்பாவை ஆந்திர கவர்னராக நியமிக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எடியூரப்பாவை மாற்ற ஆலோசனை

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதல்-மந்திரி எடியூரப்பா மட்டுமே ஆவார். அவருக்கு வயதாகி விட்டதால், எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவியை பறிக்க பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவியை பறிக்க, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்றாலும், எடியூரப்பாவுக்கு எதிரான எம்.எல்.ஏ.க்கள் அவரை மாற்ற வேண்டும் என்று கட்சி மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கவர்னராக நியமிக்க முடிவு?

இந்த நிலையில், முதல்-மந்திரி எடியூரப்பாவை, ஆந்திர மாநில கவர்னராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநில கவர்னரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) நிறைவு பெற இருக்கிறது. இதன் காரணமாக எடியூரப்பா, ஆந்திர மாநில கவர்னராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தென்இந்தியாவில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் எடியூரப்பா. இதனால் அவரிடம் இருந்து வயதை காரணம் காட்டி முதல்-மந்திரி பதவியை பறித்தாலும், அவருக்கு உரிய பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்து, ஆந்திர கவர்னராக நியமிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்