வடகர்நாடக மாவட்டங்களில் தொடர் கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகர்நாடக கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-19 20:25 GMT
பெங்களூரு:தொடர் கனமழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வடகர்நாடக கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வடகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில தினங்களாக பாகல்கோட்டை, யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர், பெலகாவி, கலபுரகி ஆகிய வடகர்நாடகம், மலைநாடு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வேதகங்கா, துத்கங்கா, ஷிரண்யகேஷி ஆகிய ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதுபோல கிருஷ்ணா, மல்லபிரபா, கட்டபிரபா ஆறுகளிலும் இருகரையை தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சாலைகள் மூழ்கின

பெலகாவி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன்காரணமாக அந்த மாவட்டத்தில் உள்ள பெலகாவி, கானாப்புரா, சிக்கோடி, கித்தூர் உள்ளிட்ட தாலுகாகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதன்காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மல்லபிரபா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கானாப்புரா அருகே ஹெப்பனகட்டி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வெள்ளத்தில் மூழ்கியது. இதுபோல கானாப்புரா தாலுகாவில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலத்தில் வெள்ளநீர் புகுந்தது. 

சிக்கோடியில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக போஜா-கரகடா, தத்தவாடா-மல்லிகவாடா, அக்கோலா-சிட்னோலி, ஜத்ரா-பிவாஷி, நாகனூர்-கோதூரா ஆகிய கிராமங்களை இணைக்கும் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

விவசாயி சாவு

பெலகாவி அருகே காகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விளைநிலத்தில் தண்ணீர் புகுந்தது. அப்போது அந்த விளைநிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்த சித்ரயா கதஹட்டி (வயது 45) என்ற விவசாயி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

இதுபோல யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகாவில் உள்ள நீலகந்தராயநாகடி, ஹவினாலா, ரோஜா, யடிகந்தி உள்ளிட்ட 9 கிராமங்களை இணைக்கும் பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் 9 கிராம மக்களும் பல கிலோ மீட்டர் சுற்றி தங்களது ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கலபுரகி மாவட்டம் கமலாப்புரா, சிஞ்சோலி தாலுகாக்களில் உள்ள கிராமங்களுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்தது.

100 பேர் கொண்ட நீச்சல் குழு

இதனால் கிராம மக்களை மீட்க 100 பேர் அடங்கிய நீச்சல் குழுவினரை அனுப்பி வைத்து இருப்பதாக கலெக்டர் வி.வி.ஜோஸ்தனா கூறியுள்ளார். வடகர்நாடகத்தில் தற்போது மழை குறைந்து உள்ளது. ஆனால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. அந்த கிராமங்களில் வசிக்கும் மக்களை பத்திரமாக வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அண்டை மாநிலமான மராட்டியத்திலும் மழை பெய்து வருகிறது. ஆனால் அங்கு உள்ள கொய்னா அணையில் இருந்து இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஒருவேளை தண்ணீர் திறந்தால் வடகர்நாடக கிராமங்கள் மீண்டும் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதனால் அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பவது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்