நாய்களால் கடித்து குதறப்பட்ட பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு
மங்களமேடு அருகே நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களமேடு:
பிணமாக கிடந்த பச்சிளம் குழந்தை
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் காந்திநகரில் தேவராஜ் என்ற துரைப்பாண்டி(வயது 62) என்பவருக்கு சொந்தமான கருவேலமர காடு உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அந்த காட்டில் சில நாய்கள், ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை இழுத்துக் கொண்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் நாய்களை விரட்டி விட்டு அருகே சென்று பார்த்தபோது, அங்கு பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்தது தெரியவந்தது. குழந்தையின் உடலை நாய்கள் மற்றும் பன்றிகள் கடித்து குதறியுள்ளதால், அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பது தெரியவில்லை.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை யாரேனும் கொன்று உடலை அப்பகுதியில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருவேலமரக்காட்டில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.