குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர்கள் செலவிட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்

குழந்தைகளுடன் அதிக நேரத்தை பெற்றோர்கள் செலவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-19 19:57 GMT
பெரம்பலூர்:

தண்டனைக்குரிய குற்றம்
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
குழந்தை திருமணம் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளியாக கருதப்படுவார்கள். மேலும் நமது மாவட்டத்தில் குழந்தைகள் தொடர்பான குற்றங்களை தடுக்க பொதுமக்கள் சைல்டு லைன் எண்கள் 1098, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணான 04328-224122, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அலுவலக தொலைபேசி எண்ணான 04328-275020 ஆகியவற்றை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கலாம்.
இணைந்து பணியாற்றவும்
மேலும் ஊரடங்கு காரணமாக குழந்தைகளின் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணித்து, அவர்களை இணையதள விளையாட்டுகளில் ஈடுபடாத வண்ணம் தகுந்த அறிவுரை வழங்கி, அவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும். குழந்தைகளிடம் நன்மை, தீமை, பகுத்தறிதல் ஆகியவற்றை பற்றி பெற்றோர்களின் உரையாடல் எப்போதும் இருக்க வேண்டும். மேலும் இணையதள வகுப்புகள் பள்ளி நிர்வாகத்தினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். குழந்தை பாதுகாப்பில் அனைத்து துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவிற்கான மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜீம், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் முகமது உசேன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்