தடுப்பூசி முகாம்களில் காலை 6 மணிக்கே குவிந்த மக்கள்

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களில் காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-06-19 19:49 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களில் காலை 6 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்றும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது வரும் தடுப்பூசிகள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 2,500 கோவிஷீல்டு தடுப்பூசியும், 1440 கோவேக்சின் தடுப்பூசியும் வந்தன. இவற்றை பொதுமக்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.
நாகர்கோவிலை பொருத்தவரை இடலாக்குடி சதவதானி பள்ளியில் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மற்றும் கோணம் கேந்திர வித்யாலயா பள்ளி ஆகியவற்றில் கோவேக்சின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. இதே போல தக்கலை அரசு ஆஸ்பத்திரி, குழித்துறை அரசு ஆஸ்பத்திரி, செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம்துறை, முட்டம், கிள்ளியூர், ஆறுதேசம், இடைக்கோடு, குட்டைக்குழி, கோதநல்லூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டது.
டோக்கன் அடிப்படையில்
நாகர்கோவிலில் நடந்த தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் வழக்கம்போல அதிகமாக காணப்பட்டது. காலை 8.30 மணிக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற பயத்தில் காலை 6 மணிக்கே வந்து முகாம்களில் காத்திருந்தனர். பின்னர் டோக்கன் கொடுக்க தொடங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கினர். இதனையடுத்து சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதேபோல கடலோர கிராமங்களில் நடந்த முகாம்களிலும் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே நெல்லையில் இருந்து மேலும் 13,500 கோவிஷீல்டு டோஸ் மருந்துகள் நேற்று குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன. அவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்