பாளை.யில் சிதிலமடைந்த கோட்டையை சீரமைக்க நடவடிக்கை கலெக்டர் விஷ்ணு தகவல்
பாளையங்கோட்டையில் சிதிலமடைந்த கோட்டையை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் சிதிலமடைந்த கோட்டையை பழமை மாறாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
சிதிலமடைந்த கோட்டை
நெல்லையில் பாரம்பரியமிக்க 8-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தி உள்ளனர். அதன்பிறகு பாளையக்காரர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
பல வரலாற்று நிகழ்வுகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளம் ஆகும். இந்த கோட்டை மீது தான் இன்றைய மேடை போலீஸ் நிலையம் இயங்கி வந்தது. அந்த போலீஸ் நிலையமும் மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
சீரமைக்க நடவடிக்கை
இது நெல்லை மக்கள் மனதில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி, மேடை போலீஸ் நிலையம் இருந்த பகுதியை கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மையை, அடையாளத்தை பாதுகாத்து வழங்கிட சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கோட்டையை பார்வையிட்டார். பின்னர் கோட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் நேற்று கலெக்டர் விஷ்ணு கோட்டைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் இந்த கோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாளையங்கோட்டை வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக கோட்டை புதுப்பிக்கப்படும்" என்றார்.