கடையநல்லூரில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
கடையநல்லூரில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூரில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வினியோகம் குறித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் குடிநீர் ஆதாரமாய் விளங்கும் பெரியாற்று படுகைக்கு நேரில் சென்று குடிநீரை பம்பிங் செய்வது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு அனுப்புவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாவடிக்கால் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை எடுத்து அதில் கலக்கப்பட்டுள்ள குளோரின் அளவு குறித்து சோதனை செய்தார்.
குறை கேட்டார்
பின்னர் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அங்கு கொேரானா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் வழங்குவதில் குறைகள் ஏதும் உள்ளதா? என்று கடைக்கு வந்த பொதுமக்களிடம், கடை விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.
அதன்பிறகு கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர், அங்கு நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஸ்டான்லி ஜெபசிங், இளநிலை பொறியாளர் முரளி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, பொறியியல் பிரிவு ஸ்டீபன் உள்ளிட்டோரிடம் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தாசில்தார் ஆதிநாராயணன், தலைமையிடத்து துணை தாசில்தார் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் காசிலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தி, மாசாணம் காளிராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.