மணப்பாறை டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10½ லட்சம் நூதன திருட்டு
மணப்பாறை டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 794 நூதன முறையில் திருடப்பட்டது.
திருச்சி,
திருச்சி மணப்பாறை மதுரை ரோட்டை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 84). டாக்டரான இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது அந்த நபர், டாக்டரின் வங்கிக்கணக்கு குறித்து கேட்டதோடு, அவருடைய செல்போன் எண்ணுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் கேட்டுள்ளார். டாக்டர் ரங்கநாதனும் வங்கியில் இருந்து பேசுவதாக நினைத்து அனைத்து எண்களையும் அவரிடம் கூறியுள்ளார். பின்னர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்து 794 நூதன முறையில் திருடப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த டாக்டர் ரங்கநாதன் வங்கியில் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இணையதளம் மூலம் வங்கி கணக்கிலிருந்து நூதனமாக பணத்தை திருடும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.