ஸ்ரீமுஷ்ணத்தில் தோப்புக்குள் வசித்த மயிலுக்கு காய்ச்சல் கொரோனாவா? டாக்டர் விளக்கம்
ஸ்ரீமுஷ்ணத்தில் தோப்புக்குள் வசித்த மயிலுக்கு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமா என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்,
கொரோனா என்னும் கொடிய அரக்கன் தனது கோரமுகத்தை காட்டி வருவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
மனிதனை பாடாய்படுத்தி உயிரை குடித்தும் பசி அடங்காத இந்த கொலைகார கொரோனா விலங்குகளையும் தனது கோரபிடிக்குள் சிக்க வைத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலுக்கு காய்ச்சல்
இந்த நிலையில் தற்போது தோப்பு பகுதியில் வசித்த மயில் ஒன்றுக்கு காய்ச்சல் உறுதியாகி இருப்பது மேலும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்துள்ளது. அதற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ஸ்ரீஆதிவராகநல்லூர் கிராமம். இங்கு சுமார் 15 ஏக்கரில் தோப்பு அமைந்துள்ளது. இதில் அதிகளவில் மயில்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை தோப்புக்கு அருகே உள்ள வயல்வெளியில் ஒரு மயில் மிகவும் சோர்ந்து தள்ளாடியபடி நின்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தன்னார்வலர்கள் ஆனந்தன், கோபிஆனந்தன் ஆகியோர் மூலம் மயிலை பிடித்து ஸ்ரீமுஷ்ணம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஊசி போடப்பட்டது
அங்கு கால்நடை டாக்டர் பிரியதர்ஷினி மயிலை பார்வையிட்ட போது, அதற்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊசி மூலம் மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தார்.
இதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு மயிலை கண்காணிப்பில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்பேரில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் வைத்து மயிலை பாதுகாத்து வருகின்றனர்.
கண்காணிக்க அறிவுறுத்தல்
இதுகுறித்து கால்நடை டாக்டர் பிரியதர்ஷினி கூறுகையில், இந்த மயிலுக்கு சாதாரண காய்ச்சல் தான். பறவைகளுக்கு சீசன் நேரத்தில் வரும் காய்ச்சல் தான். இதனால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை.
தொற்று வகையை சார்ந்ததாக இருந்தால் பறவைகளுக்கு மூக்கில் தண்ணீர் அதிகமாக வடியும். ஆனால் அதுபோன்று எதுவும் இந்த மயிலுக்கு இல்லை. ஆகையால் விரைவில் சரியாகிவிடும். இருந்தாலும் அந்த மயில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.