பரங்கிப்பேட்டை அருகே கோவில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

பரங்கிப்பேட்டை அருகே கோவில் மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கிராமத்துக்குள் அதிகாரிகளை நுழையவிடாமல் தடுக்க சாலைகளில் முள்செடிகளை வெட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-19 17:43 GMT
பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அடுத்த தச்சகாடு அருகே உள்ளது வல்லம் கிராமம். இந்த கிராமத்தில் செல்லும் இணைப்பு சாலையோரம்  கன்னியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே  கோவிலுக்கான மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த கோவிலுக்கு பின்பகுதியில் வசித்து வருபவர்களில் ஒருவர், சென்னை ஐகோர்ட்டில் எங்கள் பகுதிக்கு செல்ல வழி இல்லை, எனவே கோவில் மண்டபத்தை அகற்றி தரவேண்டுமென்று வழக்குத் தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவில், அந்த மண்டபத்தை இடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. 

சாலை மறியல்

இதையடுத்து நேற்று காலை  சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ், புவனகிரி தாசில்தார் அன்பழகன், குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சந்தோஷ் குமார், இன்ஸ்பெக்டர்கள் பரங்கிப்பேட்டை  தேவி,  அண்ணாமலை நகர்  சீனு சங்கர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் வல்லம் கிராமத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். 

இதுபற்றி அறிந்த கிராம மக்கள் , அதிகாரிகள் மற்றும் போலீசார் தங்கள் கிராமத்துக்குள் வர விடாத வகையில் அங்கு முள்செடிகளை வெட்டி போட்டு சாலையை அடைத்தனர். அதோடு அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு கிராமத்துக்குள் நடந்து சென்றனர். 

கோவிலில் திடீர் பூஜை

தொடர்ந்து மண்டப பகுதியில் திரண்ட  மக்கள், அதை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதிலும் பலன் கிடைக்கவில்லை. இதற்கிடையே கோவிலை திறந்து பூஜை செய்தனர். அப்போது சில பெண்கள் அருள்வந்து சாமி ஆடினார்கள்.

15 நாட்கள் காலஅவகாசம்

 இதை பார்த்த அனைத்து துறை அதிகாரிகள்   இன்னும் 15 நாட்களுக்குள் நீங்களாகவே இந்த மண்டபத்தை அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நாங்கள் அகற்றுவோம் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

 இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்