வணிக வளாக உரிமையாளர் குத்திக்கொலை

திருவாரூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம மனிதனை பிடிக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-06-19 17:38 GMT
திருவாரூர்;
திருவாரூர் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம மனிதனை பிடிக்க முயன்ற வணிக வளாக உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏ.டி.எம்.மையம்
திருவாரூர் அருகே உள்ள கூடூர் நடுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 60). இவருக்கு சொந்தமான வணிக வளாகம் திருவாரூர்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பாரத ஸ்டட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. 
நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது பொதுமக்களை கண்டதும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். 
மீட்க வந்தார்
இதனால் சந்தேகமடைந்த மக்கள் அவர்களை விரட்டி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருவாரூர் தாலுகா போலீசார் வந்தனர். அவர்களிடம் தப்பி ஓடிய ஒரு வாலிபர்  சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்த மதன்(வயது 18) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றனர். 
அப்போது தப்பிச்சென்ற மதனின் கூட்டாளியான இளமங்கலம் பகுதியை சேர்ந்த பிரதாப்(20) தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் சம்பவ இடத்துக்கு மதனை மீட்பதற்காக வந்தார்.
குத்திக்கொலை
அப்போது பிரதாப்பை வணிக வளாக உரிமையாளர் தமிழரசன் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதாப்  தனது கையில் இருந்த திருப்புளியால் தமிழரசனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 
இதில் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் அடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தமிழரசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 
பணம் தப்பியது
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த திருவாரூர் தாலுகா போலீசார்  ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர், கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் கிடந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி வெல்டிங் வைத்து உடைக்கப்பட்டு இருந்தது. 
கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது சத்தம் கேட்டு சரியான நேரத்தில் சம்பவ இடத்துக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
4 பேர் கைது
இதைத்தொடர்ந்து பிடிபட்ட மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் பேரில் போலீசார் தீவிர தடுதல் வேட்ட நடத்தி இளமங்கலத்தை சேர்ந்த பிரதாப், ஊட்டியாணி பகுதியை சேர்ந்த ஆகாஷ்(19), விஜய்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களுடன் சேர்த்து ஏற்கனவே பொதுமக்கள் பிடியில் சிக்கிய மதனையும் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொள்ளையர்கள் பயன்படுத்திய எரிவாயு சிலிண்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் இருந்து திருடப்பட்டது என தெரிய வந்தது. .
கொலை செய்யப்பட்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது தமிழரசன் தனது மூத்த மகள் மைதிலியுடன் வசித்து வந்தார். 

மேலும் செய்திகள்