கோஷ்டி மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு
கடமலைக்குண்டு அருகே நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். மோதலின்போது துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடமலைக்குண்டு :
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் ரவி (வயது 42). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (42) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் ஞானசேகரனை சந்தித்த ரவி, 2 பேரும் சமாதானமாக சென்று விடலாம் என்று கூறினார். மேலும் சமாதானம் பேசுவதற்காக, ஞானசேகரனை அங்குள்ள தனது உறவினரான கார்த்திக் என்பவரின் வீட்டிற்கு ரவி நேற்று அழைத்து சென்றார்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவியின் உறவினர்களான ஜெயபிரபு, ராஜேஷ், தாமரைச்செல்வன், முருகன், கார்த்திக் மற்றும் ரியாஸ்முகமது ஆகியோர் ரவியை சரமாரியாக தாக்கினர்.
4 பேருக்கு அரிவாள் வெட்டு
இதையறிந்த ஞானசேகரனின் உறவினர்கள் சின்னசாமி, இதயராஜ், பிரேம்குமார், மற்றொரு கார்த்திக் ஆகியோர் அங்கு சென்று ரவி மற்றும் அவருடன் இருந்தவர்களை தாக்கினர். இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
அப்போது திடீரென ஒருவருக்கொருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் வெட்டினர். இதில் ரவி, ராஜேஷ், ரியாஸ்முகமது, ஞானசேகரன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடும்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கியை காட்டி மிரட்டல்
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஞானசேகரன், ரவி ஆகியோர் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் இரு தரப்பை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மோதலின் போது, ஜெயபிரபு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி ஞானசேகரன் தரப்பினரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
துப்பாக்கி குறித்து ஜெயபிரபுவிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.