சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது
ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கூலி தொழிலாளி
பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 26). இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நெகமம் அருகே உள்ள 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து அந்த சிறுமியிடம் பிரதாப் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த சிறுமியின் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை திருமணம்
இந்த நிலையில் பிரதாப் திருமணம் செய்வதற்காக சிறுமியை அழைத்துக் கொண்டு போடிபாளையத்திற்கு வந்தார். பின்னர் அங்கு உள்ள ஒரு கோவில் வைத்து அந்த சிறுமியை திருமணம் செய்ததாக தெரிகிறது. இதற்கு பிரதாப்பின் தாய் மாரியம்மாள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போக்சோவில் கைது
விசாரணையில் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பிரதாப்பின் தாய் மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும், போலீசார் கோவை போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.