கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-06-19 17:03 GMT
பென்னாகரம்:
நீர்வரத்து அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 
2,000 கனஅடி
நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது. 
இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்
இந்த நிலையில் மேட்டூருக்கு நேற்று நீர்வரத்து சற்று குறைந்தது. அதாவது நேற்று முன்தினம் வினாடிக்கு 446 கனஅடி வீதம் வந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 443 கனஅடியாக குறைந்தது. 
மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 92.84 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 92.12 அடியாக குறைந்தது.

மேலும் செய்திகள்