காரிமங்கலம் அருகே மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ
காரிமங்கலம் அருகே தனியார் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 60). இவர் கெரகோடஅள்ளியை சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் மெத்தை, தலையணை, பாய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் தொழிற்சாலையில் பலத்த காற்று வீசியதால் அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்து கொண்டது. பின்னர் தொழிற்சாலையில் இருந்த மெத்தை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களில் தீப்பொறி விழுந்து மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது.
இதையறிந்த அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது.
இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை இயங்காததால் வேலையாட்கள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.