பழனி அருகே சுகாதார ஆய்வாளர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பழனி அருகே சுகாதார ஆய்வாளர் வீட்டில் 11 பவுன் நகை திருடுபோனது.

Update: 2021-06-19 16:37 GMT
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே உள்ள தாளையம் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 40). இவர், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவர், தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். 
இந்தநிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய ராகேஷ், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. ராகேஷ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ராகேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் சோதனை செய்யப்பட்டது. அது, வீட்டில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி அந்த பகுதியில் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்