கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளை கேட்ட கலெக்டர்
திண்டிவனத்தில் கொரோனா நோயாளிகளை கலெக்டர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் நகராட்சி கூடத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா நோய் பாதிப்பு குறித்தும், நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் விவரம் மற்றும் தடுப்பூசி முகாம்கள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டு தெரிந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து திண்டிவனம் அரசு மருத்துவமனை, நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பழைய நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா மருத்துவ மையம் ஆகிய இடங்களுக்கு கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களின் வீட்டிற்கே சென்று மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படுகிறதா?, அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுகிறதா? என்றும், அவர்களது குறைகளையும் கலெக்டர் மோகன் கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், திண்டிவனம் நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.