வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வீடுபுகுந்து பொருட்களை சேதப்படுத்திய போலீசார்
வேலூர் அருகே மலைக்கிராமத்தில் சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் வீடுபுகுந்து பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.;
அடுக்கம்பாறை
3 போலீசார் கைது
வேலூர் அடுத்த ஊசூர் அருகே குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிப்பவர்களில் சிலர் சாராயம் காய்ச்சுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அரியூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார் மலை பகுதிகளில் சோதனை நடத்தி சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர்.
கடந்த 9-ந் தேதி மலைக்கு சாராய ரெய்டுக்கு சென்ற அரியூர் போலீசார், சாராய வியாபாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம், நகைகளை எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொருட்களை சேதப்படுத்தினர்
இந்த நிலையில் வேலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் குழுவாக குருமலைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை உடைத்து, தானியங்களை தரையில் கொட்டி சேதபடுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பீரோவை உடைத்துள்ளனர். வீட்டில் இருந்த ரமேஷ் (37) என்பவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இதை பார்த்த மலைவாழ் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சென்று அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாரை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்தனர். அதற்கு அவர் இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.