புதிதாக பிறந்த 14 முதலை குட்டிகள்

புதிதாக பிறந்த 14 முதலை குட்டிகள்

Update: 2021-06-19 15:34 GMT
கோவை

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் 14 முதலை குட்டிகள் புதிதாக பிறந்துள்ளன.

உயிரியல் பூங்கா

கோவை மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்காவில் புள்ளி மான்கள், மலைப்பாம்புகள், ஈமுகோழி, மயில்கள், பெலிக்கான் பறவைகள் உள்பட 540 வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள முதலை பண்ணையில் 28 முதலைகள் பராமரிக்கப்படுகின்றன.

இதில் 25 வயதான முதலை ஒன்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முட்டைகள் இட்டது. தற்போது அந்த முட்டைகள் பொரிந்து, 14 முதலை குட்டிகள் வெளியே வந்தன. அவற்றை பூங்கா ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து பராமரித்து வருகின்றனர். 

இது குறித்து வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குனர் கால்நடை டாக்டர் செந்தில்நாதன் கூறியதாவது

முதலை குட்டிகள்

இந்த பூங்காவில் 28 முதலைகள் உள்ளன. இதில் 5 மட்டுமே பெரிய முதலைகள். ஒரு பெண் முதலை ஒரு முறையில் 40 முதல் 60 முட்டைகள் வரை இடும். இதில், 25 வயது முதலை ஒன்று  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 22 முட்டைகளை இட்டது. 

அந்த முட்டைகள் பொரிந்து தற்போது 14 குட்டிகள் வெளியே வந்தன.
முதலைகள் ஆக்ரோஷமாக சண்டையிடும் குணம் உடையது. இதனால் பிற முதலைகள் இந்த குட்டி முதலைகளை தாக்குவதற்கும், சாப்பிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது எனவே 14 குட்டி முதலைகளும் தனிக்கூண்டில் வைத்து பராமரிக்கப்படும்.

இறைச்சி துண்டுகள்

முதலைகள் 60 ஆண்டு வரை வாழும். குறைந்தபட்சம் 5 வயதில் பருவத்திற்கு வருகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுக ளுக்கு ஒருமுறை முட்டையிடும். 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த பூங்காவில் புதிதாக முதலை குட்டிகள் பிறந்துள்ளன. அவற்றுக்கு உணவாக இறைச்சி சிறு, சிறு துண்டுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்