மடத்துக்குளம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

மடத்துக்குளம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2021-06-19 15:27 GMT
போடிப்பட்டி:
மடத்துக்குளம் பகுதியில் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதியில் அமராவதி அணையை நீராதாரமாகக் கொண்டு அதிக அளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மடத்துக்குளம், குமரலிங்கம், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர், கடத்தூர், கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமராவதி ஆற்றுப்பாசனத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில் நடப்பு பருவத்துக்கான நெல் சாகுபடிப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் மடத்துக்குளம் பகுதியில் பெய்த கனமழையால் இவ்வாறு விதைத்த நெல் விதைகள் சீராக முளைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது நடவுப்பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் நாற்றங்கால் அமைத்து நாற்று நடவு செய்வதற்குப்பதிலாக நமது பாரம்பரிய நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடியைத் தொடங்கினோம்.
கனமழை
அதன்படி நெல் வயலைத்தயார் செய்து அதில் நெல் விதைகளை சீராகத் தூவுவதன் மூலம் நடவு மேற்கொண்டோம். ஆனால் அவ்வாறு தூவப்பட்ட நெல் விதைகள் சீராக முளைக்கவில்லை. நெல் விதைகளைத் தூவி சில நாட்களில் மடத்துக்குளம் பகுதியில் பெய்த கனமழையே இதற்குக்காரணமாகும். மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட நெல் விதைகள் ஆங்காங்கே குவியல் குவியலாக முளைத்து விட்டது. பல விதைகள் முளைக்காமல் வீணாகிவிட்டது.
 நடவு செய்து 14 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் சற்று வளர்ந்ததும் குவியலாக இருக்கும் நாற்றுக்களைப்பிடுங்கி பரவலாக நடவு செய்ய வேண்டும். இதற்கென மீண்டும் அதிக கூலி கொடுத்து ஆட்களைக்கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக செலவும், இழப்பும் ஏற்பட்டுள்ளதுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வரும் நிலையில் இயற்கையும் விவசாயிகளுக்கு எதிராக திரும்பியது போன்ற நிலை மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்